தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி ‘We the Leaders’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்த அமைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாற்றுக்கட்சியினரும் தங்களை அதிவேகமாக இணைத்து வருவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புதிய அமைப்பின் எழுச்சியைப் பறைசாற்றும் விதமாக, அதன் முதலாவது பிரம்மாண்ட மாநில மாநாட்டை பொள்ளாச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்டப் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டி, பொள்ளாச்சி – கோவை சாலையில் உள்ள பிரம்மாண்ட மாநாட்டு மைதானத்தில் இன்று காலை பூமி பூஜை மற்றும் முகூர்த்தக்கால் (பந்தல்கால்) நடும் விழா பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது. கோவை மாவட்டப் பொறுப்பாளர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில், மங்களகரமான சங்கொலி முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு பொள்ளாச்சி மற்றும் கோவை மாவட்ட ‘We the Leaders’ அமைப்பின் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“போதை இல்லா பொள்ளாச்சி” என்ற மிக முக்கியமான விழிப்புணர்வு மையக்கருத்தை முன்னிறுத்தி, அண்ணாமலையின் தலைமையில் இந்த மாநாடு வரும் ஜூலை 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:00 மணியளவில் மிக எழுச்சியோடு நடைபெறவுள்ளது. தமிழக இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றும், தமிழக அரசியலில் இந்த மாநாடு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
