இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, மாற்றுத்திறனாளிப் பெண்ணைக் காதலித்து ஏமாற்றிய விவகாரம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மேல்மலையம்பட்டு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணான பவித்ராவுடன் சமூக வலைதளம் மூலம் பழகியுள்ளார். நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறி, பவித்ராவை சென்னைக்கு அழைத்துச் சென்ற லட்சுமணன் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து தாலி கட்டியுள்ளார்.
சென்னையில் நண்பரின் வீட்டில் பவித்ராவை மறைத்து வைத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கு விபரம் தெரியவந்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் பல ஊர்களுக்குச் சுற்றித் திரிந்துவிட்டு பொள்ளாச்சி திரும்பிய பவித்ரா, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். ஆனால், ஆறு மாத காலம் குடும்பம் நடத்திய லட்சுமணன் திடீரென பவித்ராவின் போன் அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கி, தனது சொந்த ஊரான ஆம்பூருக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
சந்தேகமடைந்த பவித்ரா ஆம்பூருக்கு நேரில் சென்று கணவரைத் தேடியபோது, லட்சுமணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், கணவருடன் வாழ முயன்ற பவித்ராவை லட்சுமணனின் தாயார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீதி கேட்டு ஆம்பூர் காவல் நிலைய வாயிலில் அந்த மாற்றுத்திறனாளிப் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுத் தஞ்சம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பவித்ராவை ஏற்றுக்கொள்ளும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி லட்சுமணன் தனது மனைவியான பவித்ராவை அழைத்துச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
