தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் உள்ளார். கரூர் விவகாரத்தை சட்டரீதியாக கையாண்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் தனது தேர்தல் பயணத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது டிசம்பர் 5ஆம் தேதி முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தது. புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கான அனுமதி கேட்டு இரண்டாவது முறையாக முதல்வர் ரங்கசாமியிடம் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் நேரில் கோரிக்கை வைத்த நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ரோடு ஷோ நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் டிசம்பர் ஒன்பதாம் தேதி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து பொதுச்செயலாளர் ஆனந்த் நேரடியாக பெற்றுள்ளார். அதன்படி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பொதுவெளி அரசியல் நிகழ்வு இது என்பதால் அரசியல் கவனம் பெற்றுள்ளது.
