தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தச் செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திச் செவிலியர்கள் 5-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரியத் தீர்வு காணத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே 3,783 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும், 3,614 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது காலியாக உள்ள 169 பணியிடங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
