கோவையில் புதிதாக திறக்கப்பட்ட “பெரியார் அறிவுலகத்தில்” நடைபெற்ற நூல் கொள்முதல் ஊழல் விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் சிந்தனையை வளர்க்க வேண்டிய நூலகக் கொள்முதலிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய முறைகேடுகள் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
போலி பிம்பங்களை உருவாக்கி ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் விஜய், வெறும் கேமராக்களுக்கு முன்னால் கையசைப்பதிலும் ஆக்ஷன் செய்வதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரிப்பன் வெட்டிவிட்டு போய்விட்டால் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் அரசு, நூலகம் திறக்கப்படுவதற்கு முன்பாக கொள்முதல் செய்யப்பட்ட நூல்களையும் உள்கட்டமைப்பையும் குறைந்தபட்ச ஆய்வாவது செய்து சரிபார்த்திருக்க வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த ஊழல் விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெகவும் முந்தைய திமுகவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி மக்களைக் குழப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரக் கொள்முதல் மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்களில் நிலவும் முறைகேடுகளை உதாரணமாக்கி, இந்த பொய்க்கால் குதிரை அரசு தொடர்ந்து நிர்வாகச் சீர்கேட்டிலும் குழப்ப நிலையிலுமே இயங்கி வருவதாகவும், மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுவதாகவும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
எனவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார். தவறு செய்தது தவெக அரசாக இருந்தாலும் சரி, அல்லது முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
