தமிழ் சினிமாவில் அதிகமாக விலங்குகளை வைத்துப் படம் எடுத்து அப்படங்களை சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை சின்னப்ப தேவருக்கு உண்டு. எப்படி ஏ.வி.எம்-க்கு ஓர் உலக உருண்டை ஸ்டைல், ஜெமினி ஸ்டூடியோவுக்கு இரண்டு சிறுவர்கள் போன்ற பிரபலமான லோலோக்களுக்கு மத்தியில் ஒரு யானை ஓடி வந்து பிளிறுவது போல் லோகோவை வடிவமைத்து அப்போதே புதுமை காட்டியவர் சின்னப்ப தேவர்.
எம் ஜி ஆரை வைத்து நல்ல நேரம் படம் எடுத்தார். அதில் யானைகள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். அதே போல ரஜினியை வைத்து அன்புக்கு நான் அடிமை படம் எடுத்தார். அதிலும் யானை முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கும். இந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின.
அதேபோல ஒரு செம்மறி ஆட்டை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆட்டுக்கார அலமேலு என்ற படத்தை 1977 ஆம் ஆண்டு எடுத்தார் சின்னப்ப தேவர். இந்த படத்தில் சிவகுமார் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த போதும், அவர்களை எல்லாம் தாண்டி ஸ்கோர் செய்தது அந்த ஆடு. படத்தில் அந்த ஆடு செய்யும் சேட்டைகளும், சாகசங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

#image_title
அதனால் படம் சூப்பர் ஹிட் ஆனது. படம் சூப்பர் ஹிட் ஆனால் அந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் தியேட்டருக்கு சென்று ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்ப்பது வாடிக்கை. ஆனால் இந்த படத்தின் போது அந்த ஆட்டை தியேட்டர்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றுள்ளார் தயாரிப்பாளர். அந்த ஆட்டைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வந்துள்ளது.
சிவகுமார், ஸ்ரீப்ரியாவைக் கூட காண அவ்வளவு கூட்டம் வரவில்லையாம். ஆனால் அந்த ஆட்டைப் பார்க்க அப்படியொரு கூட்டமாம். 1977 ஆம் ஆண்டில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை எல்லாம் விட ‘ஆட்டுக்கார அலமேலு’ அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
