பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவின் ஜக்கன்பூர் பகுதியில், சுமார் 23,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் விபத்தில் சிக்கியதில், லாரி ஓட்டுநர் மற்றும் ஆட்டோ பயணிகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். விபத்தின் காரணமாக லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காயமடைந்தவர்களைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல், தங்களின் சுயலாபத்திற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு பாலைத் திருடிச் சென்றனர்.
இலவசமாகப் பால் கிடைக்கிறது என்ற பேராசையில், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்த அண்டா, பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்தில் திரண்டது மனிதநேயமற்ற செயலாக அமைந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த ஜக்கன்பூர் காவல் துறையினர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்துச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மனிதர்களைக் கண்டுகொள்ளாமல் பாலை அள்ளிச் சென்ற பொதுமக்களின் இந்த விபரீத செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
