ரூ.14,000 கோடி காலி…. விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் அதிர்ச்சி வைத்தியம்… கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்….!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.14,000 கோடி வரை குறைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை அரசு ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்காக’ ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட ரூ.11,000 கோடி நிதி, இந்த புதிய பட்ஜெட்டில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஓய்வூதிய கால பலன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மேலும் ரூ.3,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் மாறினாலும் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாக அரசு ஊழியர் அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.

   

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அரசு தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ (CPS ரத்து செய்து Old Pension Scheme) மீண்டும் நடைமுறைப்படுத்தும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே இவ்வளவு பெரிய தொகையை வெட்டிச் சுருக்கியிருப்பது அவர்களின் எதிர்பார்ப்பின் மீது இடி விழுந்தது போல் அமைந்துள்ளது என்று சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

   

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த நிதி குறைப்பு குறித்து உடனடியாகச் சட்டமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு ஊழியர்களின் வாழ்நாள் கனவான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.