“நான் சொல்றதைத்தான் அவர் செய்வார்!”.. இஸ்ரேல் பிரதமரை ஒற்றை வார்த்தையில் அடக்கிய டொனால்ட் ட்ரம்ப்.. ஈரான் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்” என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த விவகாரம் குறித்து நெதன்யாகுவிடம் என்ன பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “அவர் நான் சொல்வதைக் கேட்பார்; நெதன்யாகு ஒரு சிறந்த மனிதர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது” என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். மேலும், நெதன்யாகு இஸ்ரேலில் சரியாக நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட ட்ரம்ப், தமக்கான ஆதரவு இஸ்ரேலில் 99 சதவீதமாக உள்ளதால், அதிபர் பதவிக்குப் பிறகு தாம் இஸ்ரேல் பிரதமராகப் போட்டியிடலாம் என்றும் நகைச்சுவையாகக் கூறினார்.

ஈரான் உடனான இந்த மோதல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று மீண்டும் உறுதியளித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரே ஒரு இறுதி வாய்ப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைகள் தாமதமாவது குறித்த கேள்விக்கு, “அமெரிக்கா வியட்நாமில் 19 ஆண்டுகளும், ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருந்தது. ஆனால் நான் இந்த விவகாரத்தில் இறங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது; அதிலும் பெரும்பாலான நாட்கள் போர் நிறுத்தத்தில்தான் கழிந்துள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளார். இதில் தமக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், ஒட்டுமொத்தமாகப் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை விட, குறைந்த அளவிலான இழப்புகளுடன் போரை முடிப்பதே தனது இலக்கு என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

   

இதற்கிடையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த முறை போர் மத்திய கிழக்கைத் தாண்டி உலகளவில் விரிவடையும் என ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) கடுமையாக எச்சரித்துள்ளது. ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் பேசுகையில், எதிரியின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் அமெரிக்கா ஒரு புதிய தாக்குதலுக்குத் திட்டமிடுவதையே காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

   

மறுபுறம், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி டெஹ்ரான் சென்று அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகிறார். இருப்பினும், அமெரிக்கா ஏற்கனவே நிராகரித்த பொருளாதாரத் தடைகளை நீக்குவது, போர் இழப்பீடு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு போன்ற கடுமையான நிபந்தனைகளையே ஈரான் தனது புதிய முன்மொழிவிலும் மீண்டும் சமர்ப்பித்துள்ளது. இதன் காரணமாக, உலக நாடுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் இப்பிராந்தியத்தில் மீண்டும் அமைதி திரும்புமா என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடித்து வருகிறது.