சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், ஜூலை மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட (PDS) மக்கள் குறைதீர் முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் இத்தகைய முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை இந்த மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான தேவைகளுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் (Ration Cards) புதிய பெயர்களைச் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் போன்ற அத்தியாவசியச் சேவைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும். மேலும், உடல்நலக் குறைவு அல்லது வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு, தங்களுக்குப் பதிலாக வேறு நபர்களை அனுப்பிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான “அங்கீகாரச் சான்று” வழங்கும் நடைமுறையும் இம்முகாமில் மேற்கொள்ளப்படும். இது தவிர, நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புகார்களையும் பொதுமக்கள் இங்குத் தெரிவித்து விரைவான தீர்வைப் பெறலாம்.
