ஈரானுக்கு ‘செக்’ வைத்த டிரம்ப்! அடிபணிய மறுத்த ஈரான் – உலகத்தையே அதிரவைக்கும் 10 அம்ச டிமாண்ட்…. அடுத்த 24 மணிநேரத்தில் என்ன நடக்கும்..?

By Nanthini on சித்திரை 7, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த போர் நிறுத்த நிபந்தனைகளை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதோடு, பதிலுக்கு 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த 10 அம்ச திட்டமானது போரை முடிவுக்குக் கொண்டுவரப் போதுமானதாக இல்லை எனக் கூறி டிரம்ப் அதனை நிராகரித்துவிட்டார். அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை) ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கெடுவிற்குள் ஈரான் பணியவில்லை என்றால், அந்த நாடு இதுவரை பார்த்திராத மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், ஈரானின் மீது “நரகத்தையே ஏவிவிடுவேன்” என்றும் டிரம்ப் மிகவும் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முதுகெலும்பாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய இந்த ஜலசந்தி திறக்கப்படுவது அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

   

ஈரானைப் பொறுத்தவரை, ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அனைத்து மோதல்களுக்கும் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்திற்குத் தகுந்த உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும், ஈரானின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

   

மேலும், போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைப்பதற்கான முறையான உறுதிமொழியை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் ஈரான் டிமாண்ட் செய்துள்ளது. பாகிஸ்தான் மூலமாக இந்த 10 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் முன்வைத்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பொதுவான இணக்கம் ஏற்படாதது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமைதி நிலவுமா அல்லது போர் மேகங்கள் இன்னும் தீவிரமடையுமா என்பது உலகளாவிய பேசுபொருளாக மாறியுள்ளது.