தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தூது சென்றதாகப் பரவி வந்த தகவல்களுக்கு, பவன் கல்யாண் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தமக்கும் விஜய்க்கும் இடையே கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக அரசியல் வட்டாரங்களில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு ஊகங்கள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க பாஜக மேலிடம் முயற்சிப்பதாகவும், இதற்காக ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணைத் தூது அனுப்பியதாகவும் செய்திகள் தீயாய்ப் பரவின. இந்தச் செய்திகள் விஜய் ரசிகர்களிடையேயும் அரசியல் பார்வையாளர்களிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வதந்திகள் குறித்துப் பேசிய பவன் கல்யாண், “நான் விஜய்யைச் சந்தித்துப் பேசி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இடையில் எங்களுக்குள் எந்த உரையாடலும் இல்லை. அப்படியிருக்கும்போது, நான் அவரை என்.டி.ஏ-வுக்கு வரச் சொல்லிப் பேசியதாகத் தகவல் எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை” என்று வியப்புடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், விஜய்யுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்பது உறுதியாகியுள்ளது.
அதே சமயம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. பாஜகவைத் தங்களின் சித்தாந்த எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். பவன் கல்யாணின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பங்களுக்கு தற்போது விடைகிடைத்துள்ளது.
