ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனம் முன்பாகத் தொண்டர் ஒருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை பகுதிக்குத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் பயணம் மேற்கொண்டபோது, அவரைக் காண்பதற்காகப் சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டிருந்தனர். அப்போது முதலமைச்சரின் வாகனம் மெதுவாக நகர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், ஆர்வக்கோளாறு காரணமாகத் தொண்டர் ஒருவர் திடீரெனப் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வாகனம் முன்பாக ஒரே குதியாகக் குதித்துப் பாய்ந்து சென்று கைகூப்பி வணக்கம் செலுத்தினார்.
இதை எதிர்பாராத முதலமைச்சர் விஜய் உடனடியாகச் சுதாரித்து, விபத்து எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற பதற்றத்துடன் அந்தத் தொண்டரை உடனே ஓரமாகச் செல்லுமாறு தனது கையாலேயே சைகை செய்து எச்சரித்தார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து ஓரமாகச் சென்றார். முதலமைச்சரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், சொந்த உயிரைப் பொருட்படுத்தாமலும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மேற்கொள்ளும் இத்தகைய ஆபத்தான செயல்கள் குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கடும் கண்டனங்களையும் கொந்தளிப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.
