தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தொடக்க காலத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்த தமீம் தலைமையிலான ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, தற்போது தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை தெளிவு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில், அக்கட்சி தற்போது ஆளும் திமுக கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் மாவட்ட ரீதியிலான கட்சி ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதிலும், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதிலும் திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக இருப்பதாக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி கருதுகிறது. குறிப்பாக, பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக வலுவான களத்தை அமைத்துள்ளதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகத் தீவிர தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக அக்கட்சியின் தலைவர் தமீம் உறுதி அளித்துள்ளார். களப்பணிகள் மூலம் திமுக கூட்டணியை மீண்டும் அரியணையில் ஏற்றப் பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுக்கட்சியான தவெக-வுக்கு ஆதரவளித்து வந்த ஒரு அமைப்பு இப்போது திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
