“நீ சீக்கிரம் செத்துப்போயிடுவ”… பாக்யராஜ் இறுதிச்சடங்கில் பார்த்திபனுக்கு வந்த அதிர்ச்சி மெசேஜ்… உறைந்து போன ஹோலிவூட்…!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

இயக்குநர் கே.பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது முதன்மை சிஷ்யரான நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், இறுதிச்சடங்கு காரியங்கள் அனைத்தையும் முன்னின்று நடத்தினார். குருவின் மீதான பற்றுதலால் அவரது உடலைத் தன் தோளில் சுமந்து சென்றது முதல், மின் மயானத்தில் அஸ்தியைப் பெற்றது வரை குடும்பத்தாரோடு ஒருவராகவே பார்த்திபன் உடனிருந்தார். இறுதி ஊர்வலத்தின் போது பாக்யராஜ் கையெழுத்திட்ட அட்டையை அவரது உடல் மீது வைத்து பார்த்திபன் அஞ்சலி செலுத்திய உருக்கமான காட்சிகள், குரு-சீடன் இடையேயான ஆழமான அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

ஆனால், இந்தத் துயரமான சூழலிலும் பாக்யராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவர், பார்த்திபனுக்குக் கடுமையான வார்த்தைகளால் சாபம் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பார்த்திபன், “அஸ்தியைக் கரைத்துவிட்டு வீடு திரும்பிய இரவில், அந்த நபர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், ‘எல்லா வேலையையும் நீயே முன்னின்று செய்கிறாய், கூட இருப்பவர்களை அனுசரிப்பதில்லை; இதனால் தான் நீ குடும்பம் இல்லாமல் கஷ்டப்படுகிறாய். கூடிய சீக்கிரம் நீ இறந்துவிடுவாய், ஆனால் உனக்குக் கூட்டமே வராது’ எனச் சாபமிட்டிருந்தார்” என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இதற்குத் தான் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும், ஒருவரைப் பிடிக்காவிட்டால் விலகிப் போகலாமே தவிர, இதில் என்ன அற்ப சந்தோஷம் கிடைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மனவேதனையில் இருக்கும் பார்த்திபனுக்கு இந்தச் சம்பவம் மேலும் தவிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாகத் தங்களது குரல்களை எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அந்த உதவி இயக்குநரின் மனிதாபிமானமற்ற செயலுக்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. “பார்த்திபன் சார், நீங்கள் கலங்காதீர்கள்; தூய்மையான அன்போடு செய்த காரியங்களுக்கு இதுபோன்ற பொறாமை கலந்த சாபங்கள் ஒருபோதும் பலிக்காது, உங்களோடு என்றும் நாங்கள் இருக்கிறோம்” என ரசிகர்கள் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கூறி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.