குழந்தைகள் விளையாட்டுத்தனமாக வாயில் பொருள்களை போடுவதன் மூலம் ஏற்படும் மூச்சுத் திணறல் உயிரிழப்பு நிகழ்வுகளை ஏற்படுத்தும். தொடர்ந்து பல இடங்களில் குழந்தைகள் நாணயம், பொம்மைகளை, ஊசி அல்லது பிளாஸ்டிக் துண்டுகள் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி இருந்த சம்பவம் நடந்து கொண்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் மொபைல் போனின் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை ஷாக் அடித்து உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் சிறுவன் ஒருவன் மாத்திரை சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. திருத்தணியை சேர்ந்த நெசவுத் தொழிலாளியான வேலு மற்றும் சசிகலாவின் நாலரை வயது மகன் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். நேற்று இரவு உடல்நிலை பாதிப்பால் சிறுவனுக்கு பாதி மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாதி மாத்திரை சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி பெற்றோர் கண் முன்னே சிறுவன் இறந்துள்ளான். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பெற்றோர்கள் குழந்தைகளை கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்றும், தொண்டையில் சிக்க கூடிய பொருள்களை கையில் படுமாறு வைக்க வேண்டாம் என்றும் மருத்துவர் அறிவுறுத்துள்ளார்.
