தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட எல்லப்பூர் கிராமத்தில், பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரணாய் என்ற இளைஞரை, கடந்த ஜூலை 6 அன்று காதலித்து கரம் பிடித்த இளம் பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் நேற்று (ஜூலை 9) கடத்திச் சென்றுள்ளனர். பிரணாயின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்ணின் உறவினர்கள், அவரது குடும்பத்தினரை கொடூரமாகத் தாக்கி, அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
https://twitter.com/HateDetectors/status/2075185018163601580/photo/1
இந்தத் தாக்குதல் குறித்து பிரணாயின் குடும்பத்தினர் பப்பன்னபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 137-ன் கீழ் (சட்டப்பூர்வ காவலில் இருந்து கடத்துதல்) போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக மேடக் வட்டார ஆய்வாளர் தெரிவித்தார். இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பப்பன்னபேட்டை காவல் நிலைய அதிகாரி இரு தரப்பு குடும்பத்தினரையும் அழைத்து முறையான கவுன்சிலிங் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், அந்தப் பெண் மீண்டும் அவரது கணவரான பிரணாயின் வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கின் உணர்வுப்பூர்வமான தன்மையைக் கருத்தில் கொண்டு, பெண்ணின் அடையாளத்தைப் போலீசார் வெளியிடவில்லை
