கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பந்தீரங்காவு சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அன்றைய தினம், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக முன்னால் சென்ற ஒரு காரை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து மற்றொரு கார் வேகமாக நுழைந்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற சுங்கச்சாவடி ஊழியர் மேத்தல் ஜிதேஷி என்பவர், காரின் குறுக்கே பாய்ந்துள்ளார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கியதால், நிலைதடுமாறிய ஜிதேஷி அந்த காரின் பானட் மீது தூக்கி வீசப்பட்டு, அதில் சிக்கிக்கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று காரை மறித்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து, காரில் வந்தவர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் வெடித்தது. காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், தனது காரின் பானட்டைச் சேதப்படுத்தியதாகக் கூறி, ஜிதேஷியை மீண்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த ஜிதேஷி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காரில் வந்தவர்கள் தங்களது வாகனம் சேதமடைந்ததாகவும், சுங்கச்சாவடி நிர்வாகம் தங்களது ஊழியரை வேண்டுமென்றே தாக்கியதாகவும் பந்தீரங்காவு காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளித்துள்ளனர். இருதரப்பு புகார்களின் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
