“பாதி மீட்டிங்கில் அவசரமாக ஓடிய புஸ்ஸி”… விஜய் வீட்டிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நடந்தது என்ன…?

By Nanthini on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஒருமுகப்படுத்தவும் இக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பார்க்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்கு கோரி ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் தவெக தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், இன்று காலை பனையூர் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், எம்.எல்.ஏ.க்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். “எந்தச் சூழ்நிலையிலும் தலைவர் விஜய்யையும் கட்சியையும் விட்டு விலகக்கூடாது; பண ஆசைக்கு அடிபணியாமல் விசுவாசத்துடன் இருக்க வேண்டும்” என அவர் அறிவுறுத்தியது, குதிரை பேரம் குறித்த அச்சத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

   

கூட்டத்தின் இடையே புஸ்ஸி ஆனந்த் திடீரென நீலாங்கரைக்குச் சென்று கட்சித் தலைவர் விஜய்யைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ஆதரவு திரட்டுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஆதரவு கடிதங்கள் கிடைத்தால் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்தும், ஒருவேளை முட்டுக்கட்டை ஏற்பட்டால் அதைச் சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு ‘அரசியல் சதி’ தான் காரணம் என தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் தனது எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக் கொள்வதில் தவெக தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தவெக ஆட்சியைக் கைப்பற்றுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் பனையூர் மற்றும் நீலாங்கரைப் பகுதிகளில் நிலவும் இந்த அரசியல் பரபரப்பு, தமிழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றத்திற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.