லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த இடத்திலா இப்படி?…. போலீஸ் பேரிகார்டுகளை காரால் இடித்துத் தள்ளிய பெண்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!

By SATHISH R on ஆடி 10, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள ஆலந்தியில், புகழ்பெற்ற சாந்த் ஞானேஷ்வர் மகாராஜ் பல்கி ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதன்கிழமையன்று அங்குள்ள பிசிஎஸ் சவுக் பகுதியில் கார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தும் பெண் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போக்குவரத்து தடை செய்யப்பட்ட பாதையில் தனது காரை அனுமதிக்க வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்ததே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது.

போலீசார் அவரைத் தடுத்தபோது, “உங்களுடைய வேலை மட்டும்தான் முக்கியமா, என்னுடையது இல்லையா? எனக்கு இதைப் பற்றி கவலையில்லை, என்னை விடுங்கள். நான் மக்களிடம் பணம் வாங்கியிருக்கிறேன், அவர்களுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று அப்பெண் ஆக்ரோஷமாக வாதிட்டுள்ளார். ஒருகட்டத்திற்கு மேல், தன் கோரிக்கையை ஏற்காவிட்டால் போக்குவரத்தை முற்றிலுமாக முடக்குவேன் என்று கூறி, நடுரோட்டில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.

   

இதனைத் தொடர்ந்து, திடீரென எழுந்து தனது காரினுள் சென்ற அந்தப் பெண், போலீசாரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த தடுப்புகளை (Barricades) காரால் இடித்துத் தள்ளிக்கொண்டு அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த முக்கிய ஆன்மீகப் பயணத்தின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்ட அந்தப் பெண் மற்றும் அவரது கார் குறித்த விவரங்களை ஆலந்தி போலீசார் சேகரித்து வருகின்றனர். தீவிர விசாரணைக்குப் பின் அவர் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.