பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் படோகி பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில், நிலப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு முற்றி பயங்கர மோதலாக மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படோகி அருகே உள்ள ஹல்லா கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் நிலப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காகப் படோகி வருவாய் துறை அலுவலகத்தில் கூடினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதில், நிலைமை கைகலப்பாக மாறியது. அலுவலகத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் தாக்கியும், செருப்புகளால அடித்துக்கொண்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த மோதலின் போது, ஒரு தரப்புடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த கை துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர் ஒருவரும் வன்முறையில் சிக்கி அடிவாங்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் சத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அலுவலகத்திற்குள் நடந்த இந்தச் சண்டைக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
