தென்காசி மாவட்டம் செங்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் விரைவு ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை அதிகாலை சுமார் 2:30 மணியளவில் பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற பாலருவி விரைவு ரயில், பகவத்திபுரம் – ஆர்யங்காவு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பாதையைக் கடக்க முயன்ற புலியின் மீது மோதியதில் அது சம்பவ இடத்திலேயே பலியானது.
தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகளும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ரயில்களின் வேகத்தை முறைப்படுத்துவது மற்றும் விலங்குகள் பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருதுறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
