பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம், அவசர அவசரமாகத் தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1888-ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் தண்டாயுதபாணி மடத்திற்கு வழக்கப்பட்ட 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, சில நபர்கள் தனியாருக்குக் கிரயம் செய்ய முயன்றனர். ஏற்கனவே அறநிலையத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட இந்த முயற்சி, கடந்த ஜூலை 6-ஆம் தேதி சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டது. சந்தை மதிப்பு ரூ. 100 கோடி கொண்ட இந்த நிலத்தை வெறும் ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்தச் செல்லாத பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது.
தற்போது வெளியாகியுள்ள அந்தச் சர்ச்சைக்குரிய கிரையப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் மேலும் பல அதிர்ச்சிகளை அளித்துள்ளன. அதில், “பழனி தண்டபாணி மடம் என்பது ஒரு தனியார் அறக்கட்டளை” என்றும், “நிலத்தின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால், ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ரூ. 2 கோடி கேட்பதே அதிக விலை” என்றும் அப்பட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் சொத்தைக் குறைந்த விலைக்குக் கைமாற்றுவதற்காகவே பத்திரத்தில் இதுபோன்ற பொய்யான தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த முறைகேட்டின் பின்னணியில் சென்னை மண்டலப் பதிவுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளின் கரம் இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறை நடைமுறைப்படி, களப் பணியில் இல்லாத அல்லது பதிவு செய்ய அதிகாரம் இல்லாத சார் பதிவாளர்களின் டிஜிட்டல் கையொப்பக் கணக்குகள் (Login Credentials) முடக்கப்பட்டிருக்கும். மேலதிகாரிகள் இணையதள அனுமதி வழங்கி, யூசர் நேம் மற்றும் கடவுச்சொல்லைப் பகிர்ந்தால் மட்டுமே அவர்களால் ஆவணப் பதிவுகளைச் செய்ய முடியும்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வழக்கமான பத்திரப்பதிவுப் பணியில் இல்லாதவர் எனத் தெரியவந்துள்ளது. அவ்வாறிருக்கையில், அவருக்கு இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான உள்நுழைவுத் தரவுகளைக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த செல்வாக்குமிக்க உயரதிகாரிகளின் பின்னணியும் ஆதரவும் இல்லாமல் இத்தகைய பிரம்மாண்ட நில மோசடி சாத்தியமில்லை என்பதால், சிபிசிஐடி போலீசார் இந்த அதிகார மையங்களை நோக்கித் தங்கள் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.
