தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியலில் மிகப்பாரிய கூட்டணியாக இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் மோதலும் விரிசலும் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் நீண்டகாலமாக நீடித்துவந்த காங்கிரஸ் கட்சி, தற்போதைய அரசியல் சூழலில் திடீரென நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைந்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியின் முறிவு மற்றும் விரிசலுக்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது. “திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதற்கு ராகுல் காந்தி குழிபறித்தார்; தான் பிரதமர் ஆவதை விட, தன் நெருக்கமானவர்களை எம்பியாக்கவே அவர் அலைந்தார்” என்றும், மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் என்றும் முரசொலி கட்டுரை பச்சையாகக் குற்றம் சாட்டியிருந்தது. இந்த கடுமையான விமர்சனம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிர்ச்சித் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோல்வி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார். ஸ்டாலினின் தோல்வி தமக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், காமராஜர், அண்ணா, இந்திராகாந்தி போன்ற மாபெரும் தலைவர்களின் வரலாற்றுத் தோல்விகளுடன் இதனை ஒப்பிட்டுப் பேசினார். காமராஜர் தோற்றபோது அண்ணா வருத்தப்பட்ட வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டிய சிதம்பரம், ஸ்டாலினின் தோல்வி தற்போதைய முதல்வர் விஜய்க்கு கூட ஆழ்மனதில் வருத்தத்தைத் தந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவின் கடுமையான முரசொலி விமர்சனத்திற்கு நேரடியாகப் பதிலடி கொடுக்காமல், ப.சிதம்பரம் ஆற்றியுள்ள இந்த நெகிழ்ச்சியான உரை தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை உசுப்பியுள்ளது. ஒருபுறம் தவெகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும், மறுபுறம் தோல்வியடைந்த மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆளுமையை விட்டுக் கொடுக்காமல் காங்கிரஸ் பாராட்டியிருப்பது, திமுகவின் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு ராஜதந்திர நகர்வாகவே பார்க்கப்படுகிறது. எது எப்படியிருப்பினும், தமிழக அரசியல் தளம் தற்போது புதியதொரு கூட்டணியை நோக்கி நகர்ந்திருப்பது தேர்தல் பிந்தைய சூழலை மேலும் சூடாக்கியுள்ளது.
