நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பையாபுரம் பகுதியில், நிலத்தகராறு காரணமாக தாய்மாமனே தனது மருமகனை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுப்பையாபுரம் மெயின் தெருவைச் சேர்ந்த முத்துக்காளை என்பவருக்கும், அவரது தாய் மாமாவான தாமஸ் பாண்டியனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து மற்றும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மானூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுப்பையாபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே முத்துக்காளை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தாமஸ் பாண்டியன் மற்றும் அவரது உறவினர் அஜீத்குமார் ஆகியோர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்காளையை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு, அங்கிருந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துக்காளை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ் கண்ணன் மற்றும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாமஸ் பாண்டியன் மற்றும் அஜீத்குமார் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
