சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதிக்கு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கச் சென்ற மேட்டூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செல்வத்திற்கு, அக்கட்சியினரே திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வத்தின் வருகையை அறிந்த தவெக தொண்டர்கள், அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர், கட்சி நிர்வாகிகளுக்கே அதிருப்தி அளிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த எதிர்ப்பிற்குக் காரணமாகத் தொண்டர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு சற்று விசித்திரமாகவும் அதிர்ச்சிகரமாகவும் உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காகத் தாங்கள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளைச் செல்வம் அபகரித்துக்கொண்டதோடு, அவற்றை மீண்டும் தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாகத் தொண்டர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், உண்மையான விசுவாசிகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் கூறி வேட்பாளருக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
