தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது 108 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் த.வெ.க-விற்கு, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், மொத்த பலம் 233 ஆகக் குறையும். இந்தச் சூழலில், ‘மேஜிக் நம்பர்’ எனப்படும் 117-ஐ எட்ட இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று அவர்கள் எடுக்கப்போகும் முடிவே ஆட்சியமைப்பதில் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.
ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், பனையூர் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்த எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்றதால் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மாமல்லபுரம் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பனையூர் வரவழைக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தங்கியிருந்த இடத்தைப் பார்வையிட்டு ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனித்துக் கொண்டார். இந்தச் சூழலில், எம்.எல்.ஏ-க்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனத் தலைமை அறிவுறுத்தியும், ஒரு சில நிர்வாகிகள் காணாமல் போனது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பனையூர் அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மாயமானதாக வெளியான தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. குதிரை பேரம் குறித்த அச்சம் எழுந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் இதனை மறுத்துள்ளனர். “எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் முறைப்படி சொல்லிவிட்டுத்தான் வெளியே சென்றுள்ளனர்; அவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை” என விளக்கம் அளித்தனர். அதற்கேற்ப, இரவு 7 மணி அளவில் மாயமானதாகக் கூறப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பினர். எனினும், ஒரு சில கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ-க்களை விடுதியில் அடைத்து வைத்திருப்பதாகவும், ஆனால் த.வெ.க உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் திருப்பத்தூர் எம்.எல்.ஏ திருப்பதி செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த அரசியல் நகர்வுகள் ஒருபுறம் இருக்க, வி.சி.க மற்றும் இடதுசாரிகள் ஆதரவு அளிக்கத் தவறினால் அதிமுக-வின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் த.வெ.க-விற்கு ஏற்படும். மற்றொரு புறம், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என்ற ஊகங்களும் நிலவுகின்றன. ஆனால், அத்தகைய கூட்டணி சாத்தியமில்லை என த.வெ.க தரப்பு வாதிடுகிறது. இன்று முக்கியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ள நிலையில், விஜய் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துத் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
