அமன்பிரீத் கவுர் (22) என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், பஞ்சாபில் உள்ள ராஜஸ்தான் ஃபிடர் கால்வாயில் தனது குடும்பத்தினரால் மூழ்கடித்துக் கொல்லப்பட முயன்ற சம்பவத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளார். மஜ்பி சீக்கியரான சத்னம் சிங் என்பவரை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த அவரது தந்தையும் உறவினர்களும் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீந்தத் தெரியாத நிலையில், நீரில் மிதந்து வந்த ஒரு காட்டுச் செடியை சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பிடித்துக் கொண்டு அமன்பிரீத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். தம்மைத் தாக்கியவர்கள் அவ்விடத்தை விட்டு அகலும் வரை அவர் கால்வாயின் ஓரத்திலிருந்த செடி கொடிகளுக்கு இடையே மறைந்திருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
