ஏசி வாங்க காசு இல்லையா? இதோ நம்ம ஊரு விஞ்ஞானியின் மரண மாஸ் ஐடியா.. ஆனா ட்ரை பண்ணிடாதீங்கப்பா..!!

By Swetha on வைகாசி 22, 2026

Spread the love

தற்போது வட இந்தியா முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏர் கண்டிஷனர் (AC) அல்லது கூலர் இல்லாத மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நபர் ஒருவர், தன்னிடம் இருக்கும் ஒரு சாதாரண மின்விசிறியை (Pedestal Fan) தனது ‘தேசி ஜுகாட்’ (Desi Jugaad – உள்நாட்டுத் தொழில்நுட்ப உத்தி) மூலமாகக் குளிர்ச்சியான ஏசியாக மாற்றியுள்ளார்.

அந்த வீடியோவில், அந்த நபர் மின்விசிறியின் மோட்டார் மற்றும் அதன் கம்பி வலைப் பகுதியின் மீது ஒரு ஈரமான துணியைச் சுற்றி வைத்துள்ளார். அதற்கு கீழே தண்ணீருடன் கூடிய ஒரு பெரிய பாத்திரத்தை வைத்துள்ளார். அந்தத் துணி பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரைத் தொடர்ந்து உறிஞ்சுவதால், மின்விசிறி சுழலும் போது அறைக்குள் ஏசி போன்ற குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர், இதனால் தனக்கு 5,000 ரூபாய் மிச்சமாகிவிட்டதாகவும், கூலரின் தேவையே இல்லாமல் போய்விட்டது என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிலர் இவரின் இந்தத் திறமையைப் பாராட்டி வந்தாலும், பெரும்பாலான பயனர்கள் இதில் உள்ள பேராபத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சாரமும் தண்ணீரும் ஒன்றாகச் சேரும்போது மின்சார அதிர்ச்சி அல்லது ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்பதால், இத்தகைய ஆபத்தான உத்திகளைப் பொதுமக்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.