“23 வயதிலேயே கடவுளாக மாறிய இளைஞர்”…. திருமணமான இரண்டே மாதங்களில் நேர்ந்த துயரம்…. ஒரே ஒரு கையெழுத்து.. 6 பேருக்குக் கிடைத்த சொர்க்கம்….!

By Nanthini on மாசி 19, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் ஆவாரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மகேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கூலித் தொழிலாளியான இவர், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஷ் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. திருமணமான இரண்டே மாதங்களில் நேர்ந்த இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். அந்தப் பெரும் சோகத்திலும், மற்றவர்கள் வாழ்வதற்காக மகேஷின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

   

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ டேவிட் முன்னிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மகேஷின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் மூலம் மொத்தம் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் எவ்விதத் தாமதமுமின்றி திருச்சி, காரைக்குடி, மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.

   

உடல் உறுப்புகளைச் சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலின்றிச் செல்ல நாகர்கோவில் போலீஸார் சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மண்ணை விட்டு மறைந்தாலும், தனது உடல் உறுப்புகள் மூலம் ஆறு உயிர்களைக் காத்து மனிதாபிமானத்தைப் பறைசாற்றிய புதுமாப்பிள்ளை மகேஷிற்கு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். மகேஷ் மறைந்தாலும் அவர் மூலம் வாழும் அந்த ஆறு பேரின் வடிவில் அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.