வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழையின் தாக்கம் ஜனவரி 10, 2026 அன்றும் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
