தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் (OPS) மகன் ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஓபிஎஸ் தரப்பின் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
இன்று காலை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
டிடிவி தினகரன் எடுத்த இந்த முடிவைத் தொடர்ந்து, ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்தது. இந்தச் சூழலில் ரவீந்திரநாத் பாஜக மேலிடப் பொறுப்பாளரைச் சந்தித்துள்ளது, ஓபிஎஸ் அணியும் மிக விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதை உறுதிப்படுத்தும் ஒரு சமிக்ஞையாகக் கருதப்படுகிறது. இன்னும் சில தினங்களில் ஓபிஎஸ் தனது அதிகாரப்பூர்வ கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
