“நட்டாற்றில் விட்டுட்டாரே மவுன சாமியார்” இவரை நம்பி ஒரு புரயோஜனம் இல்ல… அதிருப்தியில் ஆதரவாளர்கள்… ஓபிஎஸ் தலையில் விழப்போகும் பேரிடி..!!

By Soundarya on மாசி 8, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் இருக்கும் வேளையில், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து வருகிறது. ஓபிஎஸ் இதுவரை எந்தவொரு தெளிவான தேர்தல் முடிவும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் தற்போது அதிருப்தியில் அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளனர்.

ஓபிஎஸ் அணியின் புதுகை தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் நகராட்சித் தலைவர் ராஜசேகர் ஆகியோரே இந்த முடிவை எடுத்துள்ளனர். “தன்னையும் நம்பி வந்தவர்களையும் நட்டாற்றில் விட்டுவிட்டு, ஒரு முடிவை எடுக்கக் கூட முடியாமல் ஓபிஎஸ் திணறி வருகிறார்” என இவர்கள் இருவரும் கடும் புலம்பலில் இருப்பதாக புதுகை மாவட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல நிர்வாகிகள் மாற்று கட்சிகளுக்குச் சென்ற நிலையில், இந்த இரண்டு ‘மெகா’ நிர்வாகிகளின் வெளியேற்றம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியை நிலைகுலையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.