அரசியல் எதிர்காலம் குறித்த பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், ஓபிஎஸ் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். தற்போது வரை தான் தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் “எனது ஒரே நோக்கம் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பதுதான்; கட்சியைப் பலப்படுத்தவும், பிரிந்தவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கவுமே நான் தொடர்ந்து போராடி வருகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவில் மீண்டும் இணைவதற்குத் தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நான் ரெடி, அண்ணன் எடப்பாடி பழனிசாமி ரெடியா?” என சவால் விடுக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு மீண்டும் இணைவதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், ஓபிஎஸ்-ன் இந்த வெளிப்படையான அழைப்பு தொண்டர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக-வின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இன்று அவர் வெளியிட்ட இந்த கருத்துக்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.
