சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் திடீர் உடல்நலப் பாதிப்பு காரணமாக, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வெடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், ஓ.பி.எஸ்-ன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அன்போடு கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது ஓ.பி.எஸ்-ன் விரைவான குணமடைய தனது வாழ்த்துகளையும் உதயநிதி தெரிவித்துக் கொண்டார்.
உடல்நலக் குறைவு காரணமாகவே இந்த ஆண்டு பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தால் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் செல்ல முடியாத சூழலிலும், ஆன்மீக மற்றும் சமுதாய மரியாதையைச் செலுத்தும் வகையில், சென்னையில் உள்ள தனது இல்லத்திலேயே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு ஓ.பி.எஸ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
