ஓபிஎஸ் அரசியல் நகர்வுகள் தற்போது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “தை மாதத்திற்குள் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் ஏற்கனவே உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மாசி மாதம் பிறந்தும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பொறுமையாக இருங்கள்” என்று அவர் ஒற்றை வரியில் பதிலளித்தது, களத்தில் இருக்கும் தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது. காலதாமதம் ஆவதால் அரசியல் களத்தில் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் அவரது தீவிர ஆதரவாளர்களிடையே அதிருப்தியாக உருவெடுத்துள்ளது.
மறுபுறம், மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் மேடை ஏறுவார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த கேள்விக்கு, “அப்படியா?” என்று மழுப்பலாகப் பதிலளித்த அவர், எதற்கும் பிடிகொடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். கூட்டணி விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்காமல் அவர் இழுத்தடித்து வருவது, எதிர்வரும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள அவரது முக்கிய ஆதரவாளர்கள் சிலர், மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
