தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இடையே ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும், சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தீபாவளி பண்டிகை தினத்தன்று திருச்சியில் 3 கொலைகள், சிவகங்கையில் 2 கொலைகள், தேனியில் பட்டாசு வெட்டுவதைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொலை மற்றும் சென்னை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் தலா ஒரு கொலை என மொத்தம் 11 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.
இச்சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, “திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கப்போவதில்லை. மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்” எனச் சாடியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “ரோட்டில் நின்றால் கொலை, தட்டிக்கேட்டாலும் கொலை என்ற அளவில் ரவுடிகள் உலா வருகின்றனர். காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லை. பலியான எஸ்.எஸ்.ஐ குடும்பத்திற்கு அரசு அரசாணைப்படி ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விடப் பட்டாக் கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கிறது. இந்த மூடர் கூட்டத்தின் சர்க்கஸ் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடித் தாக்குதலால் தமிழக அரசியல் களம் சூடேறியுள்ளது.
