மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம், மனிதநேயம் மரணித்துப் போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அரசு வேலைக்கு ஆசைப்பட்டு, தனது கணவரையே ஒரு லட்சம் ரூபாய் கூலிப்படை கொடுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளார். கணவர் இறந்தால், கருணை அடிப்படையில் அந்த அரசு வேலை தனக்கு எளிதாகக் கிடைத்துவிடும் என்று அந்தப் பெண் கணக்கு போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனால் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு, மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தான் கணவரைக் கொலை செய்யுமாறு யோசனை வழங்கியுள்ளார். ஒரு வேலைக்காகவும், துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கவும் ஒரு உயிரைப் பறிக்கத் துணிந்த இந்தச் செயல், சமூகத்தில் உறவுகளுக்கு இடையிலான மதிப்பும், பொறுமையும் எவ்வளவு தூரம் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
உறவுகளை விட அரசு வேலையும், பணமுமே மேலானது என்ற அந்தப் பெண்ணின் தவறான எண்ணம் இன்று ஒரு உயிரைப் பறித்துள்ளது. தற்போது காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வேலைக்காகத் தனது தாலியறுத்த இந்தச் சம்பவம், மனித உணர்வுகளை விடப் பேராசை எவ்வளவு வலிமையானது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
