சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பின்னடைவு குறித்துத் தனது மனவருத்தத்தைப் பதிவு செய்தார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வேதனை தெரிவித்த அவர், இந்த பின்னடைவுக்காக முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு மீது தமக்குக் கோபம் ஏதும் இல்லை எனவும், அது அன்பு கலந்த உரிமையால் ஏற்பட்ட வருத்தம் மட்டுமே என்றும் விளக்கமளித்தார். சினிமா மாயை, சமூக வலைதளக் கவர்ச்சி மற்றும் திராவிட மாடல் திட்டங்கள் இளம் தலைமுறையினரை முழுமையாகச் சென்றடையாததே இத்தேர்தல் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்கள் என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டசபை நிகழ்வுகள் எது ஆளுங்கட்சி, எது எதிர்க்கட்சி என்றே தெரியாத அளவிற்கு மாறியுள்ளதாக விமர்சித்தார். திமுகவின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு வரும் ‘Gen Z’ இளம் தலைமுறையினரைக் குறிவைத்து நடப்பு தவெக அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றென்றும் மக்களோடு மக்களாகவே நிற்கும் எனக் குறிப்பிட்ட அவர், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் திமுக முன்நின்று செயல்படும் என்றும் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
