தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்… அப்போ நாங்க போட்ட கண்டிஷன் என்னாச்சு?…. விஜய்க்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்… டெல்லிக்கு பறந்த அவசர கடிதம்….!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தவெக, பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸின் நிபந்தனையுடன் கூடிய ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இந்தச் சூழலில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தவெக வேட்பாளர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி, தவெக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு இடையே உள்ள கொள்கை முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுப்பியுள்ள கேள்வி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

“மதவாத மற்றும் பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது” என்ற காங்கிரஸின் முக்கிய நிபந்தனையை மீறி, என்.டி.ஏ (NDA) கூட்டணியின் ஆதரவோடு வெற்றி பெற்ற மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தது எப்படி என்று ஸ்ரீநிதி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, தேர்தல் முடிவுகள் வந்த 21 நாட்களுக்குள் இந்த எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸின் கொள்கை நிலைப்பாட்டிற்கு நேரடி சவாலாக அமைந்துள்ள இந்த விவகாரத்தில், தவெக அரசுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் தலைமை உடனடியாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அதிரடி அரசியல் மாற்றத்திற்குப் பின்னால் பலத்த அரசியல் உத்திகள் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கருதுகின்றனர். தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி தோல்வியடைந்ததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதை விட ஆளுங்கட்சியுடன் பயணிப்பதே சிறந்தது என அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் முடிவு செய்திருக்கலாம். மேலும், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள இவர்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதே தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்ற அதிகார வேட்கை கணக்கும் இதன் பின்னணியில் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

   

தோல்வியடைந்த வேட்பாளர் ஸ்ரீநிதி எழுப்பியுள்ள இந்த நியாயமான கேள்வி, காங்கிரஸ் கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் கைகொடுத்த காங்கிரஸ், தங்களின் கொள்கைக்கே முரணாக அரங்கேறியுள்ள இந்த எம்.எல்.ஏ-க்களின் இணைவு குறித்து இன்னும் மௌனம் காப்பது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் மாநில காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்குமா அல்லது தவெக அரசின் நீடிப்பிற்காக மௌனத்தையே பதிலாகத் தருமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்.