“ஒரே ஒரு போன் கால், வாட்ஸ்அப்பில் வந்த அந்த ஒரு மெசேஜ்”… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய நபர்…. உழைக்க வந்த இடத்தில் உயிரை விட்ட சோகம்..!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

நிழல் உலக சைபர் குற்றவாளிகளின் மிரட்டலால், வெறும் 3,000 ரூபாய்க்காக ஒரு அப்பாவித் தொழிலாளி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் குமார் (36), தனது மனைவியுடன் வாழ்வாதாரம் தேடி ஹைதராபாத் ராம்நகர் பகுதிக்கு வந்து, அங்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார். கடின உழைப்பால் தனது குடும்பத்தை வழிநடத்தி வந்த இவருக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு மரண சாசனமாக மாறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிரேம் குமாரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு மர்ம நபர்களிடமிருந்து சில மார்ஃபிங் செய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்கள் வந்துள்ளன. அவரது முகத்தை ஆபாசப் படங்களில் ஒட்டி மார்ஃபிங் செய்திருந்த அந்தக் கும்பல், உடனடியாக 3,000 ரூபாய் பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளது. பணம் தராவிட்டால் இந்தப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி விடுவோம் என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் இதுபோலச் செய்து அவமானப்படுத்துவோம் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

   

இந்த சைபர் மிரட்டலால் பிரேம் குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்துத் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர்கள் தைரியம் கூறி காவலதுறையில் புகார் அளிக்கச் சொன்ன போதிலும், அந்தக் கும்பலிடமிருந்து தொடர்ந்து வந்த மிரட்டல் அழைப்புகள் அவரை நிலைகுலையச் செய்தன. இறுதியில், சமூகத்தில் ஏற்படப்போகும் அவமானத்திற்குப் பயந்து, செவ்வாய்க்கிழமை இரவு யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

   

தகவல் அறிந்து வந்த சிகடபள்ளி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஆன்லைன் கடன் செயலிகளின் மிரட்டலா அல்லது தனிப்பட்ட சைபர் குற்றக் கும்பலின் கைவரிசையா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற இக்கட்டான சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், சைபர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டால் உடனடியாக ‘1930’ என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.