ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா கர்சாவான் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெற்ற தாயே தனது ஒன்றரை மாதக் குழந்தையை வெளியே தூக்கி எறிந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி விரைவு ரயிலில் பயணித்த முத்ராவதி கோபே என்ற பெண், ராஜ்கர்சாவான் மற்றும் மஹாலிமுரூப் நிலையங்களுக்கு இடையே திடீரெனத் தன் மடியிலிருந்த குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினார். பயணிகள் அலறித் துடிப்பதற்குள், அவர் தனது மூன்று வயது மகளையும் வெளியே தள்ள முயன்றார். ஆனால், ரயிலில் இருந்த பயணிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைப் பிடித்து, இரண்டாவது குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.
ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததும் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பெண்ணும் அவரது கணவர் ஷஹாபுதீனும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தண்டவாளப் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலில், புதர்களுக்குள் இருந்து ஒன்றரை மாதக் குழந்தையின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்ராவதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஷஹாபுதீனைக் காதல் திருமணம் செய்து, தனது பெயரை ஹசீனா பேகம் என மாற்றிக்கொண்டவர் என்பதும், இவர்கள் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர்களின் காதல் திருமணத்தை ஏற்காத பெண்ணின் குடும்பத்தினர், தங்களின் மகளைக் கடத்தியதாக ஷஹாபுதீன் மீது ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் பிடியாணை (Warrant) பிறப்பித்ததைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் சொந்த ஊருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. பெற்ற தாயே இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபடக் காரணமான குடும்பப் பின்னணி மற்றும் மனநிலை குறித்து மன்ஜ்கான் காவல் துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
