தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், குறிப்பாகச் சில ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக நான்கு அரசு கார்கள் வரை வைத்துக்கொண்டு அவற்றைச் சொந்த தேவைகளுக்கும் முறைகேடாகவும் பயன்படுத்தி வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இத்தகைய புகார்களைத் தொடர்ந்து, தங்களது கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருக்கும் அனைத்து அரசு வாகனங்களையும் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் இந்தத் தீர்க்கமான மற்றும் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிக் கூடுதலாகப் பயன்படுத்தி வந்த வாகனங்களை அதிகாரிகள் ஒவ்வொருவராக அரசிடம் திருப்பி ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர். அரசின் நிதி விரையத்தைத் தடுக்கும் நோக்கிலும், அரசு சொத்துக்கள் தனிப்பட்ட தேவைகளுக்குப் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
