தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த பிரபல யூடியூபரும் நடிகருமான ஜி.பி. முத்துவின் வீட்டருகே உள்ள நிலத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக எதிர்தரப்பினருடன் ஏற்கனவே தகராறு நிலவி வந்தது. இதுகுறித்து அவர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றத்தை நாடியதால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சூழலில், கடந்த மே மாதம் ஜி.பி. முத்துவின் வீட்டு முன்பிருந்த முள்செடிகளை அகற்றுவது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் இருதரப்புக்கும் இடையே மோதலாக மாறியதில், இருதரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஜி.பி. முத்து உட்பட 11 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த மோதலின் போது தன்னை தாக்கியதோடு, தனது 14 வயது மகளையும் தாக்கி சட்டையைக் கிழித்துவிட்டதாக ஜி.பி. முத்து வீடியோ மூலம் ஆதங்கத் தகவலை வெளியிட்டிருந்தார். மேலும், நிலப் பிரச்சினையை தட்டிக் கேட்டதற்காகத் தன்னை ‘இந்து விரோதி’ எனச் சிலர் தவறாகச் சித்தரிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்தச் சம்பவம் நடந்து பிரச்சனை சற்றே தணிந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இருதரப்புக்கும் இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.
கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், ஜி.பி. முத்துவின் வீட்டருகே கோயில் கட்டுமானத் தரப்பினர் மாந்திரீக பூஜை நடத்தியதாகத் தெரிகிறது. இதைத் தனது வீட்டு சிசிடிவி காட்சிகளில் கண்ட ஜி.பி. முத்து, அவரது தந்தை மற்றும் மனைவி ஆகியோர் நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து இருதரப்பினரும் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
