“நெஞ்சு வலிக்குது…” – சோஃபாவில் அமர்ந்த சில நிமிடங்களில் நடந்த விபரீதம்… திரைக்கதை மன்னன் பாக்யராஜின் கடைசி நிமிடங்கள்….!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையும், ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படுபவருமான நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் (வயது 73) இன்று காலமானார். ஈரோடு மாவட்டத்தில் 1953 ஆம் ஆண்டு பிறந்து, சினிமாவில் சாதிக்கும் கனவோடு சென்னை வந்த இவர், இயக்குநர் இமயத்தின் பாசறையில் வளர்ந்தார். பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், தூறல் நின்னு போச்சு என எண்ணற்ற குடும்பப்பாங்கான மற்றும் நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்குத் தந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர்.

அவரது குருநாதர் பாரதிராஜாவின் அண்மைக்கால மறைவு பாக்யராஜை மிகவும் பாதித்திருந்தது. தேனியில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்த பாக்யராஜ், சென்னை திரும்பிய பிறகும் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் தனது வழக்கமான நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பாக்யராஜுக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுயநினைவை இழந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் மாரடைப்பால் காலமானார்.

   

திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்திய பாக்யராஜின் இந்த திடீர் மறைவுச் செய்தி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், லட்சக்கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் மூழ்த்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கண்ணீர் மல்க வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி புகழ்பெற்ற இயக்குநர் பார்த்திபன் மிகுந்த சோகத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நேரில் வந்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா ஒரு சிறந்த வழிகாட்டியையும், ஆகச்சிறந்த கலைஞனையும் இழந்து தவிக்கிறது.