‘இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என கொண்டாடப்படுபவர் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன். நகைச்சுவை என்றால் அந்த நொடி மட்டும் சிரித்து விட்டு கடந்து போகும் ஒரு விஷயம் அல்ல அதன் மூலம் மக்களை சீர்படுத்தி சிந்திக்க வைக்கும் ஒரு தூண்டுகோல் என்பதை முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்.தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், எழுத்தாளர், நகைச்சுவை கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்ட சகலகலா வல்லவராக திரையுலகில் வலம் வந்தவர்.

தனக்கென எதுவுமே வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தர்மம் செய்தே வாழ்ந்து பழகிய இந்த வள்ளல் தான் இறக்கும் தருவாயில் கூட தன்னிடம் இருந்த வெள்ளி கூஜாவையும் ஏழை தொழிலாளியின் திருமணத்திற்காக கொடுத்து பிறகு தான் தனது கடைசி மூச்சை விட்டார். எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் கூட கலைவாணரிடம் இருந்து இந்த வள்ளல் தன்மையை வளர்த்து கொண்டார்கள் என்பதை அவர்களே பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தே ஏழையாகி போன இவர் கடைசியில் கடன் சுமையால் தன் சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவும் செய்தார். ஆனால் மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிக விலைக்கு அந்த வீட்டை வாங்கி கொள்வதாக கூறவும், கிருஷ்ணன் அவர்களுக்கு பணத்தேவை அதிகம் இருப்பதால் மார்வாடி இடமே வீட்டை விற்று விட அவரது நண்பர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஆனால் என் எஸ் கிருஷ்ணன் ‘நான் பல வருடங்கள் வசித்த வீடு இது.. இந்த வீட்டை ஒரு மார்வாடியிடம் கொடுத்து விட்டோமே என இந்த பக்கம் வரும்போது நான் நினைத்து கஷ்டப்படக்கூடாது. ஆனால் சிவாஜிக்கு விற்றால் ‘ நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன் இருக்கான்னு மனசு சந்தோசப்படும்’ என கூறி கடைசியில் தனது சொந்த வீட்டை சிவாஜிக்கே கொடுத்து விற்று விட்டாராம்.
