சாதாரண மக்களும் சட்டச் சிக்கல்களுக்கு எளிதில் தீர்வுகாணும் வகையில், மத்திய சட்ட அமைச்சகம் ‘நியாய சேது’ என்ற புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுமக்கள் 7217711814 என்ற எண்ணைத் தங்கள் அலைபேசியில் சேமித்து, அதன் மூலம் குடும்பத் தகராறுகள், சொத்துப் பிரச்சனைகள் மற்றும் குற்றவியல் தொடர்பான இலவச ஆலோசனைகளைப் பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்தச் சாட்பாட் வசதி, வழக்கறிஞர்களை அணுகத் தயங்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தச் சேவை அறிமுகமான ஆரம்பக் கட்டத்தில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் நிலவுவதாகப் பயனர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், இந்தத் தடங்கல்கள் சரிசெய்யப்பட்டால் பொதுமக்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே அடிப்படைச் சட்ட வழிகாட்டல்களைத் தங்கள் கைபேசி மூலமாகவே துல்லியமாகப் பெற முடியும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த முயற்சி, சட்ட உதவியை ஒவ்வொரு குடிமகனின் அருகிலும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
