உலகமே அதிர்ச்சி… அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்…. ஒரே நாளில் 10 ஏவுகணைகளை ஏவி அதிர வைத்த கிம் ஜாங் உன்….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து ‘ஃபிரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) என்ற பெயரில் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ராணுவ கூட்டுப் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. வரும் மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, இரு நாட்டு வீரர்களும் தங்களின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவது மற்றும் களப் பயிற்சிகளில் (Warrior Shield) கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பயிற்சிகள், பிராந்தியத்தில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டுப் பயிற்சியின்போது, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் தனது ஆக்ரோஷமான போக்கை வெளிப்படுத்தியுள்ளார். பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து, கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பேரில் திடீரென 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து ஜப்பான் கடற்பரப்பில் விழுந்துள்ளன.

   

ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, இந்த ஏவுகணை சோதனையினால் எவ்விதமான கப்பல்களுக்கோ அல்லது விமானங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் செயல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

தற்போது தென் கொரிய அதிபர் அமெரிக்காவில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் சூழலில், இந்த ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. வடகொரியாவின் இந்த அத்துமீறலை தீவிரமாக கண்காணித்து வரும் அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள், தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.