“அடுத்த ஆடிக்குள்ள உன் பாடி”…. திமுகவை ரணகளமாக்கிய டாக்டர் எழிலனின் எக்ஸ் பதிவு… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!

By Nanthini on வைகாசி 17, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியாக இருந்த திமுக பலத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியடைந்தது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 35 பேர் கொண்ட ஒரு கள ஆய்வுவுக் குழுவை அமைத்து, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

   

இந்தச் பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வான டாக்டர் எழிலன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘Course Correction – Step 1’ (பாதை திருத்தம் – படி 1) என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், நடிகர் சந்தானம் ஒருவரிடம் வயது கேட்க, அதற்கு அவர் ‘ஆடி வந்தால் 67’ என்கிறார். உடனே சந்தானம், ‘ஆடி வருவதற்குள் உன் பாடி வந்துவிடும் போல.. நீ இன்னும் இந்த சீட்டில் இருந்து தேய்த்துக் கொண்டிருக்கிறாய்; இனி இந்த கைரா நாட்டிற்குள் 60 வயதுக்கு மேற்பட்ட யாரும் இருக்கக் கூடாது’ என்று பேசுவது போன்ற நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றுள்ளது.

   

திமுகவின் தேர்தல் தோல்விக்கு மூத்த நிர்வாகிகளின் ஆதிக்கமும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காததுமே காரணம் என்பதை மறைமுகமாகக் சுட்டிக்காட்டவே எழிலன் இதனைப் பதிவிட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவைச் சீரமைக்க ஸ்டாலின் முயன்று வரும் வேளையில், எழிலனின் இந்த ‘60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடமில்லை’ என்ற தொனி கொண்ட பதிவு, கட்சிக்குள்ளேயே இருக்கும் மூத்த தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கும் விதமாக அமைந்துள்ளதா என்ற கேள்வியையும், விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது.

 

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவின் குஷ்புவை எதிர்த்துப் போட்டியிட்டு 31,462 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றவர் டாக்டர் எழிலன். ஆனால், அண்மையில் நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் தவெக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரனிடம் 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். தன்னைப்போன்ற இரண்டாம் கட்ட மற்றும் இளம் தலைவர்களுக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவம் தந்து, மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையே எழிலன் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Course correction
Step 1 pic.twitter.com/17XC2Iwlh6

— Ezhilan (@Dr_Ezhilan) May 17, 2026