பொதுவாக உலக நாடுகளில் போர் பதற்றம் ஏற்படும் காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கம் அல்லது அமெரிக்க டாலரை பாதுகாப்பான புகலிடமாகத் தேடிச் செல்வார்கள். இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயரும். ஆனால், தற்போது நிலவும் ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வழக்கத்திற்கு மாறாகத் தங்கத்தின் விலை உயரவில்லை. மாறாக, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை சரிவைக் கண்டு வருவது முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திரமான மாற்றத்திற்குப் பின்னால் ‘பிட்காயின்’ (Bitcoin) போன்ற கிரிப்டோகரன்சிகளின் அபரிமிதமான வளர்ச்சி இருப்பதாகக் கருதப்படுகிறது. போர் தொடங்கிய ஒரு வார காலத்திற்குள் பிட்காயின் மதிப்பு சுமார் 10 சதவீதம் வரை உயர்ந்து, 73,000 டாலரைத் தாண்டியுள்ளது. பாரம்பரிய சொத்துகளான தங்கம் மற்றும் டாலரை விஞ்சும் வகையில் பிட்காயின் உயர்ந்து வருவது, முதலீட்டாளர்களின் பார்வையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.
இதற்கான முக்கியக் காரணமாக வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால், போர்க் காலங்களில் தங்கம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது வங்கிக் கட்டமைப்பு முடங்கலாம். ஆனால் பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகளை எந்தவொரு அரசு அல்லது வங்கியின் குறுக்கீடும் இன்றி உலகின் எந்தப் பகுதிக்கும் உடனடியாக அனுப்ப முடியும். இந்த வசதியே போர் பதற்றம் நிறைந்த சூழலில் முதலீட்டாளர்களைப் பிட்காயினை நோக்கித் தள்ளியுள்ளது. இது ஒரு புதிய வகை ‘பாதுகாப்பான புகலிடமாக’ (Safe Haven) உருவெடுத்து வருகிறது.
இருப்பினும், தங்கத்தின் விலை இந்த முறை உயரத் தவறியதற்கு அமெரிக்க டாலரின் வலுவான மதிப்பும் ஒரு முக்கியக் காரணமாகும். கச்சா எண்ணெய் உள்ளிட்ட சர்வதேச வர்த்தகங்கள் டாலரில் நடப்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டாலரை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. கிரிப்டோகரன்சிகள் தற்போது முன்னிலையில் இருந்தாலும், அவற்றின் அதீத ஏற்ற இறக்கம் காரணமாகத் தங்கத்தின் பாரம்பரிய மதிப்பைப் பிட்காயினுடன் முழுமையாக ஒப்பிட முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
